திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.23 திருவானைக்கா
பண் - இந்தளம்
மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே.
1
கொலையார் கரியின் னுரிமூ டியனே
மலையார் சிலையா வளைவித் தவனே
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
நிலையா அருளாய் எனும்நே ரிழையே.
2
காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய்
பாலோ டுநெய்யா டியபால் வணனே
வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே.
3
சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே
விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே
அறமிக் கதுவென் னுமெனா யிழையே.
4
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.
5
குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
நின்றா யருளாய் எனும்நே ரிழையே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன் றியதூ மழுவா
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.
8
திருவார் தருநா ரணன்நான் முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே.
9
புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய் எனும்ஆ யிழையே.
10
வெண்நா வலமர்ந் துறைவே தியனைக்
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com